மினுவாங்கொடை முத்தரப்பு கொலைக்கான காரணம் வெளியானது

மினுவாங்கொடையில் இன்று பதிவாகிய மூன்று கொலைகள் காத்தாடி தகராறுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காத்தாடி தகராறில் இதுவரை 07 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மினுவாங்கொடையில் பாதிக்கப்பட்டவர்களினால் முதலாவது கொலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

2017 ஆம் ஆண்டு கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் ஆகஸ்ட் 2018 இல் சுட்டுக் கொல்லப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இளைஞன் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மினுவாங்கொடையில் கொல்லப்பட்ட தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மூவரும் இன்று மினுவாங்கொடையில் உள்ள அவர்களது சொந்த வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பலியானவர்கள் 51 வயதுடைய ஒருவரும், அவரது 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு மகன்களும் ஆவார்கள்.

எவ்வாறாயினும், கலேவெல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து மினுவாங்கொடையில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.