கண்டி உடுதும்பர ‘புஞ்சி லோகாந்த’ (Mini World’s End) பகுதியில் மலைச்சரிவில் விழுந்த 27 வயதுடைய இளைஞரின் சடலத்தை இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையினர் மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கை செப்டெம்பர் 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி முதல் குறித்த இளைஞர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர். பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது, அவரது கையடக்கத் தொலைபேசி கோபுரத் தரவுகளின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, மினி வேர்ல்ட்ஸ் எண்ட் பகுதியில் உள்ள ஆழமான மலைச்சரிவின் மத்தியில் அவரது சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.
மிகவும் கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பில் சடலம் சிக்கியிருந்ததால் அதனை மீட்பது சவாலான பணியாக இருந்தது. இதையடுத்து உடுதும்பர காவல்துறையினர் இலங்கை இராணுவ கொமாண்டோ படையினரின் உதவியைப் பெற்றனர். விசேட உத்திகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி கொமாண்டோ படையினர் சடலத்தை மீட்டனர்.
உயிரிழந்தவர் மேனிக்கின்ன, கண்டேகம்மெத்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மரணம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










