
மிகப்பெரிய கனடா வீசா மோசடி : ஒன்பது பேர் கைது!
போலி விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட ஒன்பது இலங்கையர்கள் நேற்று திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கனடா செல்ல ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 4.5 மில்லியன் பெறப்பட்டு போலி ஆவணங்களுடன் ஒன்பது பேரும் நாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் நின்ற குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் ஒரு உள்ளூர் பயணியின் இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த கனேடிய விசா போலியானது என்பதை கண்டறிந்து அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி கனடா செல்ல தயாராக இருநத ஒரு பெண் உட்பட மேலும் எட்டு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டனர்
நேற்று மாலை 6.40 மணியளவில் துபாய் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL 225 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் அனைவரும் காத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக இவ்வாறு பெரிய குழுவொன்று இலங்கையிலிருந்து போலி ஆவணங்களுடன் கனடா செல்ல முற்பட்டுள்ளதாக சிரேஷ்ட குடிவரவு விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பயணியும் போலி ஆவணங்களுக்காக 4.5 மில்லியன் ரூபா செலுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, காலி மற்றும் நெலுவாவைச் சேர்ந்த 30 முதல் 40 வயதுக்குட்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவை ஒருங்கிணைத்தவர் நேற்று மாலை குறித்த ஒன்பது பேரையும் நீர்கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்து போலி ஆவணங்களை சரி பார்த்து அதன்பின் அவர்களை விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த மிகப்பொரிய மோசடியின் ஒருங்கிணைப்பாளரை கைது செய்ய உடனடியாக நீர்கொழும்பில் உள்ள குறிப்பிடப்பட்ட ஹோட்டலுக்குச் அதிகாரிகள் சென்றனர்.
கனேடிய விசா மோசடியின் மூளையாக செயல்பட்டவர் தற்போது டொராண்டோவில் வசிக்கும் ஒரு இலங்கையர் என்பதும், அவர் தற்போது கைது செய்யப்பட்ட உள்ளூர் முகவர் மூலம் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக ஆவணங்கள் சிஐடி யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
