மானிப்பாயில் சபாநாயகர் கலந்துகொண்ட நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட மானிப்பாய் தவிசாளர்!

 

இன்றையதினம் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வானது மானிப்பாய் இந்துக் கல்லூரியில், சபா நாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் திரு.ஜசீதன் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பிரதேச சபையின் தவிசாளர் ஜசீதனும் உறுப்பினர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டனர். அதன்பின்னர் சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் என பலருக்கும் நிகழ்வில் முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளருக்கு எந்தவிதமான முன்னுரிமைகளும் வழங்கப்படவில்லை.

அவர் ஒரு ஒரமாக அமர்ந்திருந்தார். பின்னர் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் குழப்பமடைந்த நிலையில், தவிசாளரும் உறுப்பினர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

குறித்த நிகழ்வானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அனிருத்தகனால் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளருக்கு உத்லியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு, அவர் நிகழ்வுக்கு வருகை தந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளரை புறக்கணித்து நிகழ்வு நடாத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் விசனத்தை வெளியிடுகின்றனர்.