மாத்திரைகள் கலர் கலரா இருக்க காரணம் என்ன?
இப்பேததெல்லாம் மருந்து, மாத்திரைகள் இல்லாத ஒரு வீட்டைக் கூட பார்க்க முடியாது.
இரத்த அழுத்த மாத்திரைகள், வலி நிவாரணிகள் அல்லது வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் என எந்த மாத்திரயாக இருந்தாலும், அதன் நிறங்கள் நம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். நீல நிற காப்ஸ்யூல்கள் முதல் பளிச்சென்று தெரியும் சிவப்பு மாத்திரைகள் வரை, சந்தைப்படுத்தல் ஈர்ப்பிற்காக மட்டுமல்லாமல் முக்கியமான நோக்கத்திற்காகவும் மாத்திரைகள் இப்படி பல்வேறு நிறங்களில் இருக்கின்றன.
மாத்திரைகளுக்கு வண்ணம் பூசுவதன் முதன்மை நோக்கம், அதை அடையாளம் காண்பதற்காக தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நோயாளிகள் பெரும்பாலும் காலை, மாலை அல்லது வாராம்தோறும் என்ற அளவுகளில் பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
இப்படி மாத்திரைகள் பல நிறங்களில் இருப்பதால், வேறுபடுத்தி அறியவும் குழப்பத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
வெவ்வேறு மாத்திரைகளுக்கு வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்துவது மருந்து தொடர்பான பிழைகளை 30 சதவீதம் வரை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேப்போல் மருந்தாளுநர்களும் வண்ண குறியீட்டை நம்பியுள்ளனர்.
கிராமப்புறங்களிலும், குறைந்த எழுத்தறிவு நிலை உள்ளவர்களிடமும் இது மிகவும் முக்கியமானதாகிறது. ஏனெனில் ஒரு மாத்திரையை அதன் பெயரைப் படிப்பதை விட நிறத்தால் அடையாளம் காண்பது எளிது.
இரத்த அழுத்தத்திற்கு நீல மாத்திரை, இரும்புச்சத்துக்கு இளஞ்சிவப்பு மாத்திரை அல்லது வைட்டமின் சி-க்கு மஞ்சள் மாத்திரை என அவர்களின் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறி, நினைவாற்றலை வலுப்படுத்தி, தவறுகளைக் குறைக்கிறது.
நோயாளிகள் பெரும்பாலும் வண்ணங்களை சில விளைவுகளுடன் தொடர்புபடுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் மாத்திரைகள் ஆற்றல் மற்றும் விரைவான நிவாரணத்துடன் தொடர்புடையவை. இவை பொதுவாக காய்ச்சல் மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
நீலம் மற்றும் பச்சை நிறம் அமைதியையும் நம்பிக்கையையும் தூண்டுகின்றன. அதனால்தான் அவை பெரும்பாலும் பதட்ட எதிர்ப்பு மருந்துகள் அல்லது தூக்க மாத்திரைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளை மாத்திரைகள் வலி நிவாரணிகளுக்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவை பாதுகாப்பானவை, சுத்தமானவை மற்றும் நம்பகமானவை என்று கருதப்படுகின்றன.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மார்க்கெட்டிங்கும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. வயக்ரா போன்ற உலகளாவிய பிராண்டுகள் தனித்துவமான அடையாளத்தை உருவாக்க, உறுதி, ஆற்றல் மற்றும் நம்பிக்கையைக் குறிக்கும் நீல நிறத்தை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தன.
ஆயுர்வேத மருந்துகள் இயற்கையாகவே அவற்றின் வண்ணங்களை மூலிகைகளிலிருந்து பெறுகின்றன. அதே நேரத்தில் அலோபதி பிராண்டுகள் அனுமதிக்கப்பட்ட செயற்கை சாயங்களைப் பயன்படுத்தி கவர்ச்சியாக தோன்றுகின்றன.
அரிதான சந்தர்ப்பங்களில் மாத்திரையில் உள்ள வண்ண்னகள், சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டும் என்று கூறப்படுகிறது. பிரகாசமான வண்ண மாத்திரைகளை உட்கொண்ட பிறகு தடிப்புகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வண்ண மாத்திரைகள் சில சவால்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கிராமப்புற சந்தைகளில் நிறத்தை வைத்து மட்டுமே மாத்திரையை தேர்ந்தெடுப்பது போலி மருந்துகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
தோற்றத்தை மட்டும் நம்புவதற்குப் பதிலாக லேபிள்கள், தொகுதி எண்கள், ஹாலோகிராம்கள் மற்றும் காலாவதி தேதிகளை சரிபார்க்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர்.
மாத்திரையின் நிறம், மருந்தின் வேதியியல் விளைவை மாற்றாது; அது நுகர்வோர் நம்பிக்கையை மட்டுமே மேம்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
