மாதவிடாய் நாட்களில் வயிறு வலியா…???

மாதவிடாய் காலத்தில் வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். சிலருக்கு மட்டுமே மாதவிடாய் காலத்தில் வலி, தசைப்பிடிப்பு, பிடிப்பு என்று எதுவுமில்லாமல் இயல்பான நாட்களாக இருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு தீவிரமான வலி, கிராம்ப்ஸ் என்று கூறப்படும் இழுத்து பிடிப்பது போன்ற, சுருக்கென்று குத்தும் வலியால் அவதிப்படுவார்கள். இதில் இடுப்பு மற்றும் தொடை வலியும் சேர்ந்துக் கொள்ளும். கருப்பை தனது அக உறையை உதிரமாக வெளியேற்றும் போது, சுருங்கி விரியும்; அப்போது வயிற்று வலி உண்டாகும்.

மாதவிடாய் வலிக்கு, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது, பிடித்த உணவுகள் சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது மற்றும் வலி நிவாரணிகள் ஆகியவை ஓரளவுக்கு உதவும். மாதவிடாய் காலத்தில் தசைப்பிடிப்பு, இழுத்து பிடிப்பு மற்றும் வலியை குறைப்பதற்கு இந்த மூன்று அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கிறார்.

Periods Pain

மெக்னீசியம் : உடலில் மெக்னீசியம் அளவு குறைவாக இருந்தால் அது பொதுவாகவே தசை வலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே மாதவிடாய் காலத்தில் கர்ப்பப்பை சுருங்கி விரியும் பொழுது பிடிப்பு ஏற்படும். கருப்பையில் இருக்கும் மென்மையான தசைகளை தளர செய்வதற்கு, ப்ரோஸ்டாகிளாண்டின் என்ற ஹார்மோன் சுரக்கும். ப்ரோஸ்டாகிளாண்டின் அதிகமாக இருந்தால் மாதவிடாய் நாட்களில் வலியை ஏற்படுத்தும். எனவே இந்த வலியை தவிர்ப்பதற்கு மற்றும் குறைக்க, அதிக அளவு மெக்னீசியம் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். பூசணி விதைகள், வாழைப்பழம், ராகி. வெண்ணைப் பழம் ஆகிய அனைத்துமே மெக்னீசியம் நிறைந்த உணவுகள் ஆகும்.

விட்டமின் டி : பொதுவாகவே நிறைய பேருக்கு விட்டமின் டி சத்து குறைவாக இருக்கும். கல்சியம் மற்றும் விட்டமின் டி இவை இரண்டுமே இணை-ஊட்டச்சத்துக்கள் என்று கூறப்படுகின்றன. அதாவது உடலில் விட்டமின் டி போதுமான அளவு இல்லை என்றால் கல்சியம் பற்றாக்குறையும் இருக்கிறது என்று அர்த்தம். கல்சியம் குறைவாக இருந்தால் சாதாரணமாகவே தசைகளை பாதிக்கும். கால்சிஃபெரால் என்று கூறப்படும் ஒரு ஆக்டிவ் விட்டமின் டி, ப்ரோஸ்டோகிளாண்டின் அளவுகளை நிர்வகிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதாவது, விட்டமின் டி அளவின் அடிப்படையில் தான் கல்சியம் ஹோமியோஸ்டாடிஸ் உள்ளது. எனவே, டிஸ்மெனோரியா (dysmenorrhea) என்று கூறப்படும் மாதவிடாய் பிடிப்பை குறைக்க இது உதவும். சூரிய ஒளியில் இருந்து விட்டமின் டி நமக்கு இலவசமாகவே கிடைக்கும். தினசரி குறைந்தது 20 நிமிடம் சூரிய ஒளி நம்மீது பட வேண்டும். காளான்,  முட்டையின் மஞ்சள் கரு, சால்மன் மீன் ஆகியவையும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள் ஆகும்.

விட்டமின் ஈ : ஆண்டிஆக்சிடன்ட் அதிகமுள்ள விட்டமின் ஈ சத்து, அராக்கிடோனிக் (arachidonic) என்ற ஒரு கொழுப்பு அமிலம் உடலில் வெளியாகி,  அது ப்ரோஸ்டாகிளாண்டின் ஆக மாறுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் மாதவிடாய் வலியும் தசைபிடிப்பும் குறையும். சூரியகாந்தி விதைகள், வேர்கடலை, பாதாம், கிவி, ப்ரோக்கொலி, குடை மிளகாய் ஆகியவற்றில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்