மாணவிகளுக்கு பேருந்தில் பாலியல் தொந்தரவு: பாடசாலை அதிபர் கைது
கம்பளை பிரதேசத்தில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபரை புபுரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கலஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய குறித்த பாடசாலையின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையில் கல்வி பயிலும் 14 மற்றும் 15 வயதுடைய மாணவிகளுக்கு அதிபர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் புபுரஸ்ஸ காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிந்து மாணவர்களுடன் பேருந்தில் கலஹா பகுதிக்கு செல்லும்போது, அவர்களின் அருகில் அமர்ந்திருந்த குறித்த அதிபர் தனது பையினால் மூடிக்கொண்டு அவர்களின் உடலை ஸ்பரிசம் செய்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.
மாணவிகளின் வாக்குமூலங்கள் மற்றும் அதை நேரில் பார்த்த மாணவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் முறைப்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் வலய கல்வி அலுவலகத்தில் அளித்த முறைப்பாட்டின்படி அதிபரை இடமாற்றம் செய்து அந்த அலுவலகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அதிபர் இன்று புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்