மாணவனுக்கு எமனான மரக்கிளை

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவில் நேற்று முன் தினம் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மரக்கிளை முறிந்து, விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளான்.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வரும் நியூட்டன் தோட்டத்தைச் சேர்ந்த வச்சிகுவோம் முருகன் அஷால் (வயது -14) என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சிகை அலங்கார கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே மரம் முறிந்து விழுந்து அவர் படுகாயம் அடைந்த நிலையில் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அம்மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடற் கூற்று பரிசோதனை, சிறுவனின் தந்தை முருகன் முன்னிலையில் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.