மஹிந்த ராஜபக்ஷ ரிஸ்க் எடுத்ததால் தான் ஜனாதிபதி அனுரவால் யாழ்ப்பாணம் செல்ல முடிந்தது – விமல் வீரவன்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துணிந்து செயல்பட்டதால் தான், இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் யாழ்ப்பாணத்தில் சென்று துணிச்சலாக உரைகளை நிகழ்த்த முடிகிறது, என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்ததன் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறியமை, இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி, விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு தலைமை தாங்கிய நாட்டின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், கொழும்பில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
