மஸ்கெலியாவில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்து போக்குவரத்து துண்டிப்பு!

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில், பல இடங்களில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில், போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் புரவுன்லோ கங்கேவத்தை மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள, அதிரடி படையினர் முகாம் பகுதியில், பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில், மஸ்கெலியா நல்லதண்ணி, மஸ்கெலியா மரே, மஸ்கெலியா வாழமலை பகுதிகளுக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்வதோடு, கடும் காற்று வீசுவதால் பாரிய மரங்கள் சாய்ந்துள்ளது, நீர்த்தேக்க பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்த நிலையில் உள்ளது

குறிப்பாக மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 5 அடி நிரம்பி உள்ளது, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, காசல்ரீ, விமல் சுரேந்திர நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என, நுவரெலியா மாவட்ட ஆட்சியர் துஷாரி தென்னகோன் மற்றும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.