மழை அதிகரிக்கும் போத கவனம் தேவை – அழகமுத்து நந்தகுமார்
-மஸ்கெலியா நிருபர்-
நுவரெலியா, மஸ்கெலியா பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் வாகனச் சாரதிகளும் போது மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அட்டன்-டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவர் வைத்தியர் அழகமுத்து நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நாளை புதன்கிழமை முதல் 28 ஆந் திகதி வரை இலங்கையில் 250 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களை அண்மித்துள்ள தலவாக்கலை, மஸ்கெலியா, அட்டன், நோட்டன் பிரிட்ஜ் முதலான பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகின்றது.
நீர் தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது. சில இடங்களில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் இப்பகுதியை அண்மித்துள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ள படுகின்றனர்.
எனவே, மழை பெய்து வரும் நேரத்தில் பனிமூட்டம் காணப்படுவதால் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டும் என்றும், கால நிலையைக் கருத்திற் கொண்டு கூடுமானவரை பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் ஹட்டன் நகர சபை முதல்வர்.
