மல்லாகத்தில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

-யாழ் நிருபர்-

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை மல்லாகம் கல்லாரை கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவைப் புகட்டுவதன் ஊடாகச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், அவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்றை கிராமங்கள் தோறும் முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாகவே, கல்லாரை வளர்மதி சனசமூக நிலைய முன்றலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

வளர்மதி சனசமூக நிலையத்தின் தலைவர், மிதுசன் தலைமையில் நடைபெற்ற பசுமை அறிவொளி நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

இவர்களுடன் வளர்மதி சனசமூக நிலையத்தின் உபதலைவர் ஐ. குணசீலன், ஆலோசகர் சி. நாகதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். கல்லாரைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் பங்கு கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் பசுமை அப்பியாசக் கொப்பிகள் அவர்களின் கற்றல் தேவைகளின் பொருட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையை கனடா ரொறன்ரோவின் மனித நேயக்குரல் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.