
மலைப்பாம்பை கழுத்தில் வைத்து நடனமாடிய பெண் கைது செய்யப்பட்டார்!
மலைப்பாம்புடன் நடனமாடிய பெண், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 500,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பில் கடந்த மார்ச் 20 ஆம் திகதி நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் போட்டியாளர் ஒருவர் விலங்கின மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான மலைப்பாம்பை பயன்படுத்தியதாகவும், வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேக நபர், புத்தளத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து 25,000 ரூபாவுக்கு மலைப்பாம்பை வாடகைக்கு எடுத்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் உடனடியாக அதைத் திருப்பிக் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மலைப்பாம்பை இத்தகைய முறையில் பயன்படுத்துவது, சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை நீதவான் பிணையில் செல்ல அனுமதித்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
