மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் முகாமையாளரான திஷா சாலியன் மரணம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வுத் துறை (CBI) முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்துள்ளது.
அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகளை விரிவாக விசாரணை செய்யுமாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரபலங்களின் முகாமையாளரான பணியாற்றி வந்த திஷா சாலியன், 2020 ஜூன் 8ஆம் திகதி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மரணம் இடம்பெற்ற சில நாட்களுக்குப் பின்னர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
திஷா சாலியன் மரணம் தொடர்பான வழக்கு ஆரம்பத்தில் தற்செயல் மரண அறிக்கையாக (ADR) பதிவு செய்யப்பட்டிருந்தது.
அண்மையில், மும்பை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இந்திய மத்திய புலனாய்வுத் துறை விசாரணையை முன்னெடுத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.
முந்தைய விசாரணையொன்றின்போது, நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் குழாம், திஷா சாலியன் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ஏன் தற்செயல் மரண அறிக்கை மாத்திரம் பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பியது.
மேலும், அவரது மரணம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருந்த போதிலும், திஷா சாலியனின் குடும்பத்தினருக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கையும் தற்செயல் மரண அறிக்கையும் வழங்கப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
திஷாவின் தந்தை சதீஷ் சாலியன், தனது மகளின் மரணத்துக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தமக்குத் தெரிந்த தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் வழங்கியதாக முன்னதாக தெரிவித்திருந்தார். மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பலரின் பெயர்களையும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அவர் கூறியிருந்தார்.
திஷா சாலியன் மரணம் தொடர்பான இந்திய மத்திய புலனாய்வுத் துறை விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆதரவாளர்கள் பலரிடமும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.










