
மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிய பேருந்திலேயே பிரிந்த உயிர்
பதுளையில் இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை அதே பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.
டிக்கோயா, படல்கல மேல் பிரிவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான ஆறுமுகன் தியாகேஸ்வரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தொற்று அல்லாத நோய்க்கு மருந்து எடுப்பதற்காக, மாதம் ஒருமுறை கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்று வரும் அவர் நேற்று வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி, இன்று வெள்ளிக்கிழமை காலை கிளினிக்கிற்குச் சென்று, தனியார் பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் கீழே இறங்காதது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் பயணியை சோதனையிட்டதில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரின் பணிப்புரையின் பிரகாரம் சடலம் அதே பேருந்தில் டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
