மருத்துவமனைக்குள் சிறுநீரக திருட்டு : பின்புலத்தில் பெரும் தலைவர்கள்?

ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்தல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பல கோடி ரூபாய் மோசடி செய்த குழுவினர் சில தினங்களுக்கு முன்னர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் அரச மற்றும் தனியார் மருத்துவமனையின் அதிகாரிகள், ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் , இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களில் பின்புலன் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நெசவு தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீரகத் திருட்டு சம்பவம் தொடர்பான குற்றம் வெளியான காரணத்தினால், பெரம்பலூர் மாவட்டங்களில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், புதுச்சேரியின் புறநகர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் மோசடிகள் நடைபெற்று வருகின்றமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழுவினர் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் சிறுநீரகம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்களின் உறவினர்கள் என போலி ஆவணங்களை தயார் செய்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

மேலும், தமிழகத்தில் மோசடி மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.