
மரங்களின் பயன்பாடுகள் இன்றியமையாது
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மரங்களின் பயன்பாடுகள் மக்களுக்குப் பல வழிகளில் இன்றியமையாதது, அவ்வாறு இருந்தபோதிலும் கண்டபடி மரங்களை வெட்டி அழித்து கட்டாந்தரையாக்க முடியாது என சைல்ட் பண்ட – சிறுவர் நிதிய சர்வதேச அலுவலகத்தின் அவசர நிலை முகாமைத்துவ பணிப்பாளர் பி. பென்ஞ்ஜமின் தெரிவித்தார்.
சைல்ட் பண்ட – சிறுவர் நிதிய சர்வதேச அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்றுடன் மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்திற்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்து அங்கு அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ உதவு ஊக்க நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களைப் பார்வையிடும் நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வவுணதீவு சாளம்பைக்கேணியில் ஆடை உற்பத்திகான இளையோர் ஆற்றல் அபிவிருத்தி தொழில் வள நிலையத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் அங்கு பிரதேச இயற்கை நேச இளைஞர் செயல்பாட்டு அணியினரால் நிகழ்த்தப்பட்ட இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் எனும் விழிப்புணர்வுக் கலை நிகழ்வையும் குழுவினர் பார்வையிட்டதுடன் மரங்களையும் நாட்டி வைத்தனர்.
நிகழ்வில் இயற்கை நேய ஆர்வலர்களான இளைஞர் அணியினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த பென்ஞ்ஜமின் பாராட்டத்தக்க வகையில் மௌன நாடகத்தின் மூலம் இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியத்தை மிகத்துல்லியமாக திறம்பட விழிப்புணர்வூட்டியிருந்தீர்கள்.
இயற்கையை நேசிப்பவர்களாக பிரதேசத்திலுள்ள இளைஞர்களே அணியாக முன்வந்து இதனைச் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. மரங்கள் மனிதர்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவுகின்றன. மரங்களை மனிதர்கள் தங்களது தேவைக்குப் பயன்படுத்துவதை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும். புதிய மரங்களையும் வனங்களையும் உருவாக்கி விட்டு தமது தேவைக்கு மரங்களைப் பயன்படுத்தினால் பாதிப்புக்கள் ஏற்படாது.” என்றார்.
இந்நிகழ்வில் சைல்ட் பண்ட – சிறுவர் நிதிய சர்வதேச அலுவலகத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளர் திலக் திலகரத்ன, இடர் குறைப்பு நிபுணர் லாலனி விஜேசூரிய, அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி கே. கஜந்திரன், நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் வி. சுதர்ஷன் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் உட்பட அந்நிறுவனங்களின் இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.



