மன அழுத்தத்தின் உச்சத்தில் ‘ஜென் Z’ தலைமுறை

‘ஜென் Z’ (Gen Z) மற்றும் மில்லினியல்ஸ் (Millennials) ஆகிய இரண்டு இளைய தலைமுறையினருக்கும் நிதி சார்ந்த கவலைகளே அதிக மன அழுத்தத்திற்கான அடிப்படை காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

டெலாய்ட் எனப்படும் பிரபல சர்வதேச நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தலைமுறையினரும் தங்களது அன்றாடச் செலவுகள் மற்றும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர்.

தங்களுக்குப் போதுமான நிதி நிலைத்தன்மை இல்லை எனப் பலரும் உணர்வதாகவும், இந்த நிச்சயமற்ற தன்மையே நாள்பட்ட மன அழுத்தத்திற்கு பங்களிப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

44 நாடுகளில் உள்ள 23,000 பேரிடம், நவம்பர் 2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதேவேளை, நிதி சார்ந்த கவலைகளைத் தாண்டி, வேலையே குறிப்பிடத்தக்க மன உளைச்சலுக்கான முக்கிய காரணியாக மாறியுள்ளது.

தொடர்ந்து மன அழுத்தத்துடன் இருப்பதாகக் கூறும் Gen Z-களில் சுமார் 36% பேரும், மில்லினியல்ஸில் 33% பேரும் தங்கள் வேலையே நேரடியாக இந்தக் கவலைக்குக் காரணமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

அதிக நேரம் வேலை செய்தல், அங்கீகாரம் இன்மை, மற்றும் பணியிட முடிவுகள் நியாயமற்றவை என்ற கருத்து ஆகியவை அடிக்கடி கூறப்படும் காரணங்களில் அடங்கும்.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகும் தொடர்ந்து வரும் மனநல சவால்களை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பதிலளித்தவர்களில் பெரும் பகுதியினர் எப்போதும் அல்லது பெரும்பாலான நேரம் மன அழுத்தத்துடனும் அல்லது பதற்றத்துடனும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தத்தில் உள்ளவர்களில் 60% க்கும் அதிகமானோர் தங்கள் நிறுவனம் செயல்படும் விதத்தில் சலிப்படைவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சலிப்பு, வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் பணியிடக் கலாசாரம் குறித்த ஆழமான கவலைகளைப் பிரதிபலிக்கிறது.

சுமார் 10 Gen Z-களில் 3 பேர் பெரும்பாலான நேரம் தனிமையாக உணர்வதாகக் கூறியுள்ளனர்.