மன்னார் மாவட்ட இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தமர்வு
-மன்னார் நிருபர்-
இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,இளம் மீனவர்களுக்கான கருத்தமர்வு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை, மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட கடற்றொழில் அலுவலர் இ.ரொபின் ஜூட் வளவாளராக கலந்து கொண்டு கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சார்ந்த சட்டங்கள், மீன்பிடிக்கு பயன்படுத்த தடை செய்யப்பட்ட உபகரணங்கள்,அனுமதியின்றி சங்குகள் வைத்திருத்தல், பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள்,மற்றும் மீன்பிடிக்கான அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் இளம் மீனவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.
இக் கலந்துரையாடல் தொடர்பில், மெசிடோ (MSEDO) நிறுவனத்தின் இயக்குனர் கருத்து தெரிவிக்கையில்,
“வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மீனவ சமூகம் என்பது அதி முக்கியமான ஒன்றாகும்.இன்றைய காலகட்டத்தில் கடல் வளங்களானது வடக்கு கிழக்கு பகுதிகளில் இயற்கையாகவும் செயற்கையாகவும், பல்வேறு வடிவங்களில் அழிக்கப்பட்டு வருகிறது.
அந்த வளங்களை காப்பாற்றுவதற்காகவே சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மீனவ சமூகங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இளம் மீனவர்களை வளங்களை பாதுகாத்து பொறுப்புணர்வுடன் செயல்படும் வகையில் ஊக்குவிக்கும் முகமாக, வடக்கு கிழக்கு இளம் மீனவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு தெளிவூட்டல் களை இவ்வாறான கருத்தரங்குகள் மூலம் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் முன்னெடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
குறித்த கருத்தமர்வில், மெசிடோ நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ,திட்ட முகாமையாளர் சூ.செ. ஜான்சன்,திட்ட இணைப்பாளர் ஜூலியஸ்,நிர்வாக அலுவலர் கரோலின் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் மாவட்ட மீனவர்கள் மற்றும் இளம் மீனவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.