மன்னார் மாவட்டத்தில் எரிபொருட்களை சீராக வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்-

தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு சீரான முறையில் வழங்குவது குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு சீராக வழங்குவது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள், மீனவர் சங்கங்கள், எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சங்கங்களுக்கு எவ்வளவு எரிபொருள் கொடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

மக்களுக்கு எரி பொருட்கள்  வழங்குவதற்காக எதிர் வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் அவர்களுக்கான குடும்ப அட்டைகளை விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்ப அட்டையின் அடிப்படையில் இனிமேல் மக்களுக்கு மண்ணெண்ணை வழங்கப்படும்.

மண்ணெண்ணை மட்டுமல்ல ஏனைய தேவைகளுக்கும் அந்த குடும்ப அட்டையை பயன்படுத்த கூடியதாக இருக்கும்.

மேலும் விவசாயத்திற்கு ஒரு ஏக்கருக்கு 3 உழவுக்கும் சேர்த்து 25 லிட்டர் டீசல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலாவது உழவுக்கான 10 லிட்டர் டீசல் வழங்கி, ஒரு வாரத்திற்கு பின்பு 2 வது,  மற்றும் 3 வது உழவிற்கு ஒரு வார கால இடைவெளியில் டீசல் வழங்கப்படும்.

அதற்கான எரிபொருள் நிலையங்களையும், கமநல சேவைகள் நிலையங்கள் அடிப்படையில் தெரிவு செய்து பயனாளிகள் விவரம் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்படும்.

அதனடிப்படையில் பயனாளர்கள் எரிபொருள்களை பெற்றுக்கொள்ள முடியும், என குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.