மன்னார் நகர சபையினால் கழிவுகள் கொட்டும் இடத்தில் தொடர் பிரச்சினை

-மன்னார் நிருபர் –

மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை கொட்டுவது மற்றும் மறுசுழற்சி செய்வதில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றது

குறிப்பாக மன்னார் நகர் பகுதியில் அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதி ஒன்றில் தற்போது தற்காலிகமாக கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் குறித்த பகுதிகளில் இறந்த மிருகங்கள் உட்பட, மிருக கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் உட்பட பல்வேறு சுகாதார பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக நகர சபையுடன் முரண்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் நேற்று மாலை குறித்த பகுதியில் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் மீள் சுழற்சி தொடர்பான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் அப்பகுதியில் உள்ள சுகாதார பிரச்சினைகளை ஆராய்வதற்கும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் குழுவினர் மன்னார் நகரசபைக்கு சொந்தமான குறித்த பகுதிக்கு விஜயம் செய்தனர்.

இதன் போது குறித்த பகுதியை முழுமையாக ஆராய்ந்த குழுவினை மன்னார் நகரசபை தலைவர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டிருந்தனர் .

விரைவில் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி திண்ம கழிவு மேலாண்மை செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் குறித்த குழுவினர் மேற்பார்வை செய்தனர்.

இதேவேளை மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் தற்போது தற்காலிகமாக குறித்த கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்ற நிலையில்,குறித்த கழிவு பொருட்களில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும்,குறித்த கழிவு பொருட்கள் தேக்கி வைக்கும் பகுதியில் திடீரென ஏற்படுகின்ற தீ காரணமாக வெளி வரும் புகையினால் அப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.