மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : வெளிநாட்டில் உள்ள பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

-மன்னார் நிருபர்-

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை,  இருவர் உயிரிழந்த  துப்பாக்கி சூட்டு சம்பவத்தை  வழி நடத்தியவர், வெளிநாட்டில் இருக்கின்றார் என்றும், அவருக்கு எதிராக   சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாகவும், பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது, இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாக கொண்டு,  இந்த  முரண்பாடு காணப்பட்டது.

முதல் சம்பவத்தில் 2022 ஆம் ஆண்டு இருவர்  உயிரிழந்தனர், அதனைத் தொடர்ந்து  ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலை செய்யப்பட்டார், அதன்பின் 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இறுதியாக கடந்த வியாழக்கிழமை  மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும், முதலாவதாக இடம் பெற்ற  இருவரின் மரணம் தொடர்பில் சந்தேக நபர்களாவர்.

எவ்வாறாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.

குறித்த சம்பவத்தை வழி நடத்தியவர் வெளிநாட்டில் இருக்கின்றார், அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளோம், என பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க