
மன்னார் காற்றாலை திட்டத்துக்கான நிலங்களை புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கான ஒப்பந்தங்களை மீண்டும் அழைத்துப் புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறுகிறார்.
மன்னாரில் மின் உற்பத்தி தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்டுமானத்திற்காக செலவழித்த ஆரம்பத் தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக வெளியான செய்திகள் குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
எந்தவொரு திட்டத்திற்கும், திரும்பப் பெறக்கூடிய மற்றும் திரும்பப் பெற முடியாத வைப்புத்தொகைகள் உள்ளன என்றும், அதன்படி, என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக் கூடாது என்பதைக் கண்டறிந்து, தேவையானதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கடந்த பெப்ரவரி மாதம் தீர்மானித்திருந்தது.
