மன்னாரில் 110 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாதணிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்-

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மன்னார் பேசாலையில் அமைந்துள்ள 543 வது ராணுவ படைப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வெசாக் மாதத்தை ஒட்டி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிமனை க்குட்பட்ட சிறுத்தோப்பு ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 110 பேருக்கு பாதணிகள் ( சப்பாத்து) காலுறை மற்றும் குறித்த பாடசாலை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

பேசாலை 543 ராணுவ படைப்பிரிவில் படை அதிகாரி கேணல் துசார கறஸ்கம தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜயே சேகர  கலந்து கொண்டார்.

மேலும் விருந்தினர்களாக 543 வது படைப்பிரிவு அதிகாரி கேணல் ஜெகத் பிரேமதாச,  ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.