மன்னாரில் பகல் நேர குழந்தை பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு!
-மன்னார் நிருபர்-
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்ப்பட்ட சேய் பகல் பராமரிப்பு நிலையம் மன்னார் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் இன்று புதன் கிழமை வைபவரீதியாக திறந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வேலைக்கு செல்லும் பெண்களின் மன ரீதியான இடர்பாடுகளை குறைப்பதை அடிப்படையாக கொண்டும் அதே நேரத்தில் வேறு மாவட்டத்தில் பணிபுரிவோர், தாய் தந்தை இருவரும் பணிபுரிவோர், கூட்டு குடும்பமாக வாழாத குடும்பத்தின் குழந்தைகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட குறித்த பகல் பராமரிப்பு நிலையம் மேற்படி வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், சிறப்பு விருந்தினர்களாக உதவி மாவட்ட செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர், மன்னார் நகரசபை செயலாளர், அரச ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த சேய் பராமரிப்பு நிலையைம் புனித ஜோசேவாஸ் சபை அருட்சகோதரிகளினால் பராமரிக்கப்படவுள்ளதுடன் ஒரே சமயத்தில் 20 பிள்ளைகளை கவனிக்க கூடிய வசதியுடன் குறித்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் குறித்த பராமரிப்பு நிலையத்தை ஆறுவயதுக்குட்பட்ட பிள்ளைகளை உடைய அனைத்து பெற்றோர்களும் நிபந்தனையின் அடிப்படையில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்