மன்னாரில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக்

 

-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட கிளினிக் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர்.

இதனால் அவர்கள் பெரும் பிரயாண மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர்.

இந்த நிலைக்கு தீர்வாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம். எச். எம். ஆஸாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரின் சேவையில் இந்த கிளினிக் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட கிளினிக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி நேற்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம். எச். எம். அஸாத் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம். பிரியதர்ஷன் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எஸ். தர்ஷன், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விசேட கிளினிக் சேவையை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் எம்.எச்.எம்.ஆஸாத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.