
மன்னாரில் தைப்பொங்கல் விழா
-மன்னார் நிருபர்-
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா – 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடை பெறவுள்ளது.
வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருவாட்டி தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் குறித்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது.
இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட நிகழ்வு தொடர்ந்து இடம் பெற்றது.
மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.
