மன்னாரில் தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

 

-மன்னார் நிருபர்-

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை போலீஸ் நிலைய தடுப்பு காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை  மாலை போதை பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரை பேசாலை பொலிஸார் துரத்தி பிடித்ததோடு, இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை பொலிஸார் பேசாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸ் நிலைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பின்னர் குறித்த நபர் பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (3) காலை குறித்த சந்தேக நபர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.

இதனை அடுத்து பேசாலை போலீஸ் நிலையத்திற்கும் சென்று பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.

குறித்த சந்தேக நபர் பேசாலை போலீஸ் நிலையத்தின் முதலாம் இலக்க தடுப்பு காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த குறித்த நபரின் தாய் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை வருகை தந்து தனது மகனை பொலிஸார் அடித்து கொலை செய்துள்ளதாக அங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.