-மன்னார் நிருபர்-
நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தின் போது மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பொது பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலை பெருமாள் கட்டு கிராம அலுவலர் அலுவலகத்தில் கிராம அலுவலர் லுமா சிறி தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இடர் காலத்தில் மக்களுக்காக களத்தில் நின்று பொது பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி பிரதேச செயலாளர்,நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர்,மத தலைவர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இடர் காலத்தில் தமது உயிரையும் துச்சமென நினைத்து மக்களுக்காக பணியில் ஈடுபட்ட இளைஞர்களை கௌரவித்து, அவர்களின் முயற்சியை பாராட்டி கௌரவிக்கும் வகையில் கிராம அலுவலர் லுமா சிறி ஒரு எடுத்துக்காட்டாக குறித்த நிகழ்வை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








