மனைவியின் அந்தரங்க படங்களை பகிர்ந்த கணவன்: கேட்ட வரதட்சணையை தராததால்

இந்தியாவில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமபெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கேட்ட வரதட்சணை தராத ஆத்திரத்தில், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

33 வயதான செபி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார், 80 கிராம் தங்க நகையை வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே வரதட்சணை போதவில்லை என்று கணவர் மனைவியை தொடர்ச்சியாக வற்புறுத்தி கொடுமை செய்து வந்துள்ளார். பெண் வீட்டார் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பத்தார். எனவே, அவர்களால் கூடுதல் வரதட்சணை தர முடியவில்லை. கணவரின் கொடுமைகளை பெண் சுமார் 2.5 ஆண்டுகள் பொறுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இந் நிலையில் குறித்த நபர் சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆபாச செயலிகளில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த மனைவி தனது பிறந்த வீட்டாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

தொடர்ந்து அந்த பெண் தனது பெற்றோர் துணையுடன் அருகே உள்ள கும்மங்குளம் பொலிஸ்நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து, கணவர் செபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செபியின் செல்போனை கைப்பற்றி அதை சோதனை செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்