மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று புதன்கிழமை காலை நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.
அவர் அந்த பிரிவில் முன்னிலையாவதற்கு முன்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.
நீங்கள் நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
நான் அதை அறிந்திருக்கவில்லை. எனினும் என்னை அழைத்ததற்கான காரணங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டேன். ஒரு வார காலமாக ஊடங்கள் ஊடாக அறிக்கையிடப்படுகின்றன. நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கான வாக்குமூலத்தை பெறுவதற்காக என எண்ணுகிறேன்.
அரசாங்கத்தின் இந்த விசாரணைகள் ஏற்புடையது என நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆம். இந்த விசாரணைகள் அவசியமானதாகும். தற்போதைய அரசாங்கத்தை நம்பி பெரும்பாலான மக்கள் வாக்களித்திருந்தார்கள். எனினும் அவர்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை அறிந்து தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த விசாரணைகள் ஊடாக ஊழல்வாதிகள் யார்? குற்றமற்றவர்கள் யார்? என்பதை வௌிப்படையாக அறிந்துக் கொள்ள முடியும். நாம் குற்றமற்றவர்கள் என்பதை இதன்மூலம் உறுதிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமையும் என நினைக்கிறேன்.
நீங்கள் அரசியலில் இருந்து நீங்கிவிட்டீர்களா?
மக்கள் எங்களை தற்போது வீடு செல்ல வைத்துள்ளார். மீண்டும் அவர்கள் விரும்பினால் அரசியலுக்கு திரும்புவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.