மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 29 ஆவது அமர்வு கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், இலங்கை தொடர்பான விவகாரம் நேற்று ஆராயப்பட்டது.
இதன்போது, இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையிலான தூதுக்குழு கலந்துகொண்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கையின் சட்ட ரீதியான நடவடிக்கைகளைப் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர்களின் குழு பாராட்டியுள்ளது.
எனினும், நீண்டகாலமாக நிலவும் வரலாற்று ரீதியான கவலைகள், சட்டச் சிக்கல்கள் மற்றும் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் 12ஆயிரத்து 600 என இருந்தாலும், உண்மையில் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என சில மதிப்பீடுகள் தெரிவிப்பது தொடர்பில் கவலை எழுப்பப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளுக்கு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் இல்லாதது தொடர்பில் , மாநாட்டின் வழிகாட்டல்களுக்கு இணங்காத வகைப்பாடுகள் பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் ஒரு தொடர்ச்சியான குற்றம் என்ற தன்மையை குற்றவியல் நடைமுறைச் சட்டம் அல்லது புதிய சட்டம் அங்கீகரிக்கவில்லை என்றும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
20 ஆண்டுகால காலாவதிச் சட்டம் எவ்வாறு நீதியைப் பாதிக்கும், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது எப்படி என பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர் கார்மென் ரோசா வில்லா குயின்டானா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டத்தில் “போர்க் குற்றங்கள்” மற்றும் “மனிதக் குலத்துக்கு எதிரான குற்றங்கள்” என்ற கருத்துகள் ஏன் சேர்க்கப்படவில்லை? இக்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளில் ஒரு மேலதிகாரியின் உத்தரவை ஒரு பாதுகாப்பு முறையாகக் கொண்டு, குற்றமிழைத்த அதிகாரிக்குப் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா? இந்தச் சட்டம் உத்தரவிட்ட அல்லது தெரிந்திருந்த மேலதிகாரிகளின் பொறுப்பைப் பற்றிப் பேசுகிறதா?
பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறையினரின் காப்பகங்களை அணுகுவதில் ஒத்துழைப்பு இல்லை.குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை வழங்க அவர்கள் மறுப்பதாகவும் அறிக்கைகள் குறித்து நிபுணர்கள் வினவினர்.
ஒத்துழைக்க மறுக்கும் படையினருக்கு என்ன தண்டனைகள் விதிக்கப்படுகின்ற என்றும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் குழுவின் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அரசால் அச்சுறுத்தப்படுவது அல்லது கண்காணிக்கப்படுவது தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
பழிவாங்கலுக்கு அஞ்சாமல் புகார்களைச் சமர்ப்பிப்பதை அரசு எவ்வாறு உறுதிப்படுத்தும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எப்போதும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும், அதன் வருகைக்கான உரிமை சட்டத்தில் பொறிக்கப்படவில்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . .
