மனித பாவனைக்கு பொருத்தமற்ற 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில், வெள்ளம் மற்றும் மின்சாரத் தடை காரணமாக மனித பாவனைக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று (7) முத்திரையிடப்பட்டது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு (1926) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த இறைச்சித் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட கால்நடை பண்ணையை பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டு, அந்த இறைச்சித் தொகையை முத்திரையிட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் போரலஸ்ஸ தெரிவித்தார்.

குறித்த இறைச்சியின் மாதிரிகள் இன்று (8) அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.