
மனித உரிமைகள் பற்றி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்: சட்டத்தரணி டுலான் தஸநாயக்க
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மனித உரிமைகள் பற்றியும் அவை எவ்வாறு மீறப்படுகின்றன என்பது பற்றியும் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும் என வாழ்வதற்கான மனித உரிமைகள் நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி டுலான் தஸநாயக்க நேற்று முன் தினம் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.
மட்டக்களப்பில் மனித உரிமைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அறிந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் முதலுதவி நிலையத்தின் மட்டக்களப்பு இணைப்பாளர் எஸ். உபதாரணியின் இணைப்பாக்கத்தில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி டுலான் தஸநாயக்க,
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்வதற்கான மனித உரிமைகள் நிறுவனம் செயலாற்றி வருகிறது. மனித உரிமைகள் மீறப்படும்போது பாதிக்கப்பட்டவர்கள் எங்கே முறையிட வேண்டும், எவ்வாறான நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளலாம், எவ்வாறான விழிப்புணர்வுகளைப் பெற்று சட்டப்படியாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியெல்லாம் மக்களை அறிவூட்டுவதுதான் இந்த நிறுவனத்தின் செயற்பாடாக இருந்து வருகிறது.
நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக 21 மாவட்டங்களில் 24 நிலையங்களை அமைத்து செயற்பட்டு வருகின்றோம்.
மனித உரிமை மீறல்கள் சார்ந்த புகார்கள், சித்திரவதை உட்பட சிவில் சமுதாயம் எதிர்கொள்ளும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் நாம் கவனத்தில் எடுக்கிறோம். உரிமைகள் மீறப்படும் பொழுது அதனை எவ்வாறு ஊடகங்களில் அறிக்கையிடுகிறோம் என்பது பற்றி ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தவதையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இதேவேளை பிரஜை ஒருவருக்கு மனித உரிமை மீறப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றைத் தடுப்பதற்கும் இனிமேல் மனித உரிமைகள் மீறப்படாமல் இருப்பதற்கும் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.” என்றார்.
இந்நிகழ்வில் வாழ்வதற்கான உரிமை மனித உரிமைகள் நிலையத்தின் சட்டத்துறை அலுவலர் அஸ்மா றிபார்ட், சட்டத்துறை திட்ட இணைப்பாளர் ஹேஷானி கருணாரட்ன, இணைப்பாளர் பி. பிரசாந்தன் ஆகியோர் தமது நிறுவனத்தினால் ஆற்றப்படும் சேவைகளையும் அது தொடர்பாக மட்டக்களப்பு பிரதேச மக்கள் முகம் கொடுக்கும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை அணுகலாம் என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.
கிராமிய அபிவிருத்தித் திட்டமிடல் அமைப்பின் பணிப்பாளர் வி. ரமேஷ் ஆனந்தன், மனித உரிமைகள் முதலுதவி நிலையத்தின் செயற்பாட்டாளர் பி. மேகநாதன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்