மனித உரிமைகளை பாதுகாக்க அறிவார்ந்த சமூகம் கட்டி எழுப்பப்பட வேண்டும்

-யாழ் நிருபர்-

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் பாதிக்கப்படுவோருக்கு வழிகாட்டவும் மனித உரிமைகள் தொடர்பான கல்வியை அறிந்திருக்கக் கூடிய அறிவார்ந்த சமூகம் கட்டி எழுப்பப்பட வேண்டும் என ரைட்ஸ் டு லைஃப் கியூமன் ரைட் சென்டர் (right to life human right centre) தலைவர் பிலிப் திசாநாயக்கா தெரிவித்தார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ரைட்ஸ் டு லைஃப் கியூமன் ரைட் சென்டரின்   மனித உரிமைகள் பாதுகாவலர்களை உருவாக்கும் செயல் அமர்வின் இரண்டாம் நாள் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு கூட இலங்கையில் போராட வேண்டிய நிலைமையை ஏற்பட்டுள்ளது.

ஒரு மனிதன் பிறப்பினால் உரிமைகளை அனுபவிப்பதற்கு உரித்துடையவனாக காணப்படுகின்ற நிலையில் அவனது உரிமைகள் பாதுகாப்பதற்கும் அவை மீறப்படும் போது பரிகாரம் காணுவதற்கும் இலங்கை அரசியலமைப்பில் சட்ட ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படும் போது அதனை ஆராய்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு மனித உரிமைகள் பாதுகாவலர்களை உருவாக்க வேண்டிய காலத்தின் தேவை எழுந்துள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழும் மக்களின் உரிமைகள் மிகவும் பாதுகாக்கப்படுகின்ற நிலையில் வளர்ச்சி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

மனித உரிமைகள் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனும் இயல்பாகவே அறிந்திருக்க வேண்டிய ஒரு விடயம் ஆனால் எமது நாட்டில் பலர் தமது மனித உரிமைகள் மீறப்படும் போது யாரிடம் முறைப்பாடு செய்வது என்ன உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது என்பது கூட அவர்கள் அறியாத நிலை காணப்படுகிறது.

எமது அமைப்பானது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் உள்ள 16 மாவட்டங்களிலும் மனித உரிமைகள் முதலுதவி மையங்களை ஆரம்பித்துள்ளோம்.

இந்த மையங்கள் ஊடாக மனித உரிமைகள் பாதிக்கப்படுவோரை இனம் கண்டு அவர்களுக்கு ஆரம்ப முதலுதவியை வழங்குவதற்கு மனித உரிமைகள் பாதுகாவலர்களை உருவாக்கி பயிற்சி அளித்து வருகிறோம்.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஊடாக அந்தந்த மாவட்டங்களில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் அறிக்கையிடப்பட்டு அவர்களுக்குரிய நீதியையும் பாதுகாப்பையும் வழங்குவதற்குரிய ஆரம்ப முதலு உதவியை வழங்க உள்ளோம்.

ஆகவே எமது செயற்பாடானது யாழ் மாவட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சமூகம் ஒன்றை கட்டி எழுப்புவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்துடன் இணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.