மனித உடல் கழிவுகளை குளத்தில் வீசுவதற்கு முயற்சித்த நபர் கைது

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் மனித உடல் கழிவுகளை வீசுவதற்கு முயற்சித்தாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலர்ச்சாலையில் சடலங்களிலிருந்து அகற்றப்படும் கழிவுகளைக் கொண்ட பொதியுடன் தாண்டிக்குளம் பகுதிக் குளத்தில் கொட்டுவதற்கு நேற்று சனிக்கிழமை இரவு துவிச்சக்கரவண்டி ஒன்றில் ஒருவர் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்த இளைஞர்கள் சிலர் அவரை மடக்கிப்பிடித்து நைப்புடைத்து வவுனியா பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் அந்த நபரைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிக் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது, பொலிஸாரின் வாகனத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் மலர்ச்சாலையின் உரிமையாளர் வரும் வரையில் வாகனத்தை நகரவிடப் போவதில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த விடயம் தொடர்பாக நீதியான விசாரணை செய்து சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக உறுதியளித்ததன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.