“மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” எனும் தலைப்பில் பெண்கள் படையின் அங்குரார்ப்பன நிகழ்வு
-அம்பாறை நிருபர்-
“மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” “Charity for Humanity – Start Help Each Other” என்ற தலைப்பில் அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை கல்முனை மையோன் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை பெண்கள் படை – இலங்கை (Women’s Corps – Sri Lanka) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் சமூகத்தில் அன்பு, ஒற்றுமை மற்றும் உதவி மனப்பான்மையை ஊக்குவித்து, உதவி தேவைப்படுவோருக்கு தன்னார்வ பணி மற்றும் சமூக சேவை வழங்குவதை நிகழ்வின் முக்கிய நோக்கமாக குறிப்பிடப்பட்டது.
அதன் முன்னிலை ஏற்பாட்டை ஏ.எவ். றிகாஷா ஷர்பீன் செய்திருந்தார்.
நிகழ்வில் வரவேற்புரை மற்றும் அமைப்பின் அறிமுக உரையை –அமைப்பின் தலைவி றிகாஷா ஷர்பின் நிகழ்த்தினார்.
இங்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர், கல்முனை சட்டத்தரணி சங்கத்தின் தலைவி சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ், சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.றிப்கா அன்சார், ஓய்வுபெற்ற ஆசிரியை, மௌலவியா எம். எஸ். எஸ். நிஸ்ரினா மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நன்றி உரையை Women’s corps Sri Lanka அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.முபிதா நிகழ்த்தினர்.
நிகழ்வின்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளர் எம். எம். முனாஸ், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் எம். மஜீத் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய றிகாஷா ஷர்பீன், எமது தொண்டு நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் மனித குலத்திக்கு உதவுவதே இதில் குறிப்பாக பெண்களை வலுவூட்டுவது பிரதானதாகும்.
மேலும் பெண்கள் கல்வியிலும் அரச தொழில் நியமனங்களிலும் அதிகரித்து காணப்படும் இத்தருணத்தில் சமூக செயற்பாடுகளில் எமது பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
பெண்களின் வகிபாகம் குறைவாகவே எதிர்காலத்தில் இதனை கருத்திற்கொண்டு பெண்கள் அவர்களிடமுள்ள கல்வி, திறமை, ஆளுமை என்பவற்றை தமது சமூகத்திற்காக பயன்படுத்தக் கூடியவாறு மட்டுமல்லாமல் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவராக மாற்றுவதற்கான அடித்தளத்தினை Women’s Corps Sri Lanka எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் இன்று இடுகின்றோம்.
இந்த தொண்டு நிறுவனம் இனம், மதம் பாராது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக செயற்படும் என்பதோடு பெண்களுக்கான நீதியை நிலைநாட்டப்பாடுபடும் என தெரிவித்தார்.
அத்துடன் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்குவதும் எமது செயற்பாடுகளில் ஒன்றாகும் அதனடிப்படையில் பெண்கள் குடும்ப ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வுகளை உருவாக்கவுள்ளோம்.
ஆத்மீக செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். இதன் மூலமே சமூக மாற்றங்களை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வரமுடியும் என்பது எங்களது நிலைப்பாடாகும்.
சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை மக்கள், விதவைகள் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும் இவ்வமைப்பு செயற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றும் தெரிவித்தார்.
எமது தொண்டு நிறுவனத்தில் இணைந்து செயற்பட ஆர்வமுள்ள பெண்களுக்கு திறந்த அழைப்பினை விடுக்கின்றேன். என்றும் அறைகூவல் விடுத்தார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர் தனது உரையில்,
எமது ஊரிலும் சமூகத்திலும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான உதவிகள் சில நேரங்களில் குறைவாகவே உள்ளன. திருமணம் தாமதமாகி விடுவது, பெண்களின் பிரச்சினைகள் பள்ளிவாசல் பதிவுகளில் சரியாகச் சேர்க்கப்படாதது போன்ற குறைகள் உண்டு.
இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கவும், பெண்களுக்கு தகுந்த ஆதரவளிக்கவும் இந்த அமைப்பு ஒரு வலிமையான தளமாக அமையும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்தார்.
இன்றைய சூழலில், எதிர்காலத்தில் அமைப்புகளையும் நிறுவனங்களையும் வழிநடத்தப் போவது பெண்கள்தான் என்பதில் ஐயமில்லை. காரணம், பெண்களே கல்வியில் தொடர்ந்து படித்து முன்னேறுகின்றனர்.
ஆண்கள் பெரும்பாலும் விரைவாக ஒரு குறுகிய காலக் கல்வி முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பெண்கள் பொறுமையுடன் படிப்பைத் தொடர்கின்றனர். அதனால், எதிர்கால துறைத் தலைவர்களாகவும், பொறுப்பான நிர்வாகிகளாகவும் பெண்கள் அதிக வாய்ப்பு பெறுகின்றனர்.
பெண்களை நாம் நம் வாழ்க்கையில் நான்கு முக்கியமான நிலைகளில் சந்திக்கிறோம்:
1. தாயாக – எம்மை வளர்த்து, துன்பங்களைக் கடந்து, சிரமங்களை சகித்துக் கொண்டு உருவாக்குபவர்.
2. சகோதரியாக – நம்மைத் துணை நிற்பவர்.
3. மனைவியாக – வாழ்க்கைப் பயணத்தில் தோழியாக இணைவவர்.
4. மகளாக – குடும்பத்தின் மகிழ்ச்சியையும், எதிர்காலத்தின் நம்பிக்கையையும் தருபவர்.
இந்த நான்கு நிலைகளிலும், பெண்கள் தியாகம், பொறுமை, அன்பு, வலிமை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இருப்பதை நாமறிகிறோம். என்றும் தெரிவித்தார்.
மருத்துவ துறையில் பணிபுரியும் அனுபவத்தால் நான் அடிக்கடி சொல்லும் ஒரு உண்மை உண்டு. சிகிச்சை பெறும் பொழுது ஆண்கள் பல நேரங்களில் அஞ்சுகின்றனர். ஆனால் பெண்கள் அதே நேரத்தில் அமைதியாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருந்து தாங்கிக் கொள்கின்றனர்.
ஒரு மனிதர் என்னிடம் கூறியது: “பெண்கள்தான் உலகிலேயே வலிமையானவர்கள்”
உண்மையிலேயே, மாதந்தோறும் அவர்கள் அனுபவிக்கும் உடல் வலிகள், கர்ப்ப காலத்தின் சிரமங்கள், பிரசவ வேதனைகள், அதற்குப் பிறகான பாலூட்டும் காலம் – அனைத்தும் ஒரு பெண்ணின் தாங்கும் வலிமையையும், அல்லாஹ் அளித்த சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன.
வீட்டிற்குள் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் எண்ணிலடங்கா.
காலை முதலே தொடங்கும் வேலைகள் இரவு வரை ஓயாது தொடர்கின்றன. அதோடு, இன்று பெரும்பாலான பெண்கள் வெளி வேலைகளையும், சமூகப் பணிகளையும் இணைத்துச் செய்கிறார்கள்.
இவ்வளவு கடின உழைப்பையும், தியாகங்களையும் சுமந்து கொண்டிருந்தும், பெண்கள் தங்கள் வாழ்வை மகிழ்ச்சியுடனும், தன்னலமற்ற மனப்பான்மையுடனும் நடத்துகின்றனர்.
தொடங்கப்பட்ட Women Scope Sri Lanka அமைப்பு, நமது ஊரின் பெண்களுக்கு வலிமையான ஒரு மேடை ஆகும்.
இவ்வமைப்பின் மூலம் பெண்கள் தங்கள் கல்வி, திறமை, சேவை மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டு சமூகத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்வார்கள் என்பதில் எனக்கு உறுதியுண்டு.
இந்த அமைப்பின் வளர்ச்சி தொடர்ந்து நீடித்து, எமது சமூகத்தில் பெண்களின் முன்னேற்றத்தையும், நலன்களையும் நிலைநிறுத்தி, பெரும் பயன்களை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். என்று கூறினார்.
கல்முனை சட்டத்தரணி சங்கத்தின் தலைவி சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர் தனது உரையில்; இந்த நிகழ்விற்கான அழைப்பிதழ் எனக்கு கிடைத்தபோது, இது எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்பது முதலில் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், அதனை ஆழமாக ஆராய்ந்தபோது, எமது பிரதேசத்தில் சமூக சேவைக்காக ஒரு புதிய அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது என்பது எனக்கு விளங்கியது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று.
சுனாமி பேரழிவுக்குப் பிந்தைய காலத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு அமைப்புகள் எமது பகுதிகளில் இயங்கின. நானும் ஒரு சர்வதேச அமைப்பில் சட்ட ஆலோசகராகவும், திட்ட முகாமையாளராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவன். ஆனால் பின்னர் அந்த அமைப்புகளின் நிதி ஆதரவு குறைந்து, பல சேவை அமைப்புகள் மூடப்பட்டன.
இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எங்கு கொண்டு செல்லுவது, யாரின் உதவியை நாடுவது என்ற நிலைமை சமூகத்தில் ஏற்பட்டது.
அவ்வாறான வெற்றிடத்தை நிரப்பும் முகமாக இன்று இந்த சமூக சேவை அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. எமது பிரதேசத்தில் சமூக நலனுக்காக இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
எமது பிரதேசத்தில் கல்விச்சேவைக்காக பாடுபட்ட முன்னோடி ஆசிரியர்களைப் பற்றி நினைவுகூர விரும்புகிறேன்.
எனது தாயார் மற்றும் றைஹானா டீச்சர் ஆகியோர் கல்முனை முகம்மது மாளிகை கல்லூரியில் முதன்முதலாக பணியாற்றிய பெண்கள் ஆசிரியர்கள். அவர்கள் பிரதேசக் கல்வி முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்துள்ளனர். அதே போன்று இன்று எம்மிடையே ஆளுமையுள்ள அதிபர்கள், மஹ்மூத் பாலிகா கல்லூரி அதிபரும், மல்ஹார் ஷம்ஸ் மகாவித்யாலய அதிபரும் இருக்கின்றனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
இன்னும் எமது சமூகத்தில் பல பெண்கள் பலவீன நிலையில் உள்ளனர். அவர்கள் சமூக விழுமியங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனரா, இல்லையெனில் குடும்பச் சூழ்நிலைகளால் தடுக்கப்பட்டுள்ளனரா என்பதை நாம் அறியோம். ஆனால் அவர்களை முன்னேற்றம் அடையச் செய்து, குடும்பங்களின் பிள்ளைகளையும் ஒழுங்கான வாழ்வியலுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் றிகாஷா சர்பீன் இந்த அமைப்பை துவங்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
இன்றைய இளைஞர்களின் நிலைமையையும் நாம் கவனிக்க வேண்டும்.
கல்முனை நீதிமன்றத்தில் அடிக்கடி சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையால் வழக்குகளில் சிக்கிக் கொண்டு மாதக்கணக்கில் விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற பகுதிகளில் இரவு பத்து மணிக்குப் பிறகு வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் வேகமாகச் செல்லும் நிலைமை காணப்படுகிறது.
ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் அந்த மாணவர்கள் நாளைய சமுதாயத்தின் தூண்கள். ஆனால் அவர்கள் தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்வது சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியில் எமது பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் இவ்வாறான சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வாழ்வியல், வாழ்வாதாரம், கல்வி, மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செயல்படும்போது மட்டுமே எமது சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும்.
அவ்வாறு பெண்கள், இளைஞர்கள், மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டுள்ள இவ்வமைப்பு தனது உயர்ந்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ்வை வேண்டுகிறேன். என்று தெரிவித்தார்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தனது உரையில்:
நான் என் உரையை ஆரம்பிப்பதற்கு முன், ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன்.
எங்கள் சமூகத்தில் இன்று நம் குழந்தைகளுக்காக அக்கறையுடன் சிந்தித்து, வழிகாட்டி, எங்களைத் தூண்டிவிடக்கூடிய மருத்துவர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் இருக்கிறார்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
ஆனால், அதே சமயம் ஒரு சிந்தனை எழுகிறது.
எங்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் எங்கிருந்து தொடங்குகின்றன?
நாம் கல்வியளித்தாலும், வழிநடத்தினாலும், இன்னும் ஏன் தடைகள் இருக்கின்றன?
இன்றைய சூழலில், நவீன ஊடகங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
எங்கள் பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள், கல்வியிலும், எதிர்கால இலக்குகளிலும் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், அதிகப்படியான கைப்பேசி (மொபைல்) பயன்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.
இதன் விளைவாக, அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் நிலை உருவாகிறது.
நான் பாடசாலையில் சந்தித்த ஒரு சம்பவத்தை பகிர விரும்புகிறேன்.
ஒரு பெற்றோர் தமது பிள்ளைக்காக ஒவ்வொரு நாளும் புதிய கைப்பேசியைக் கொடுத்து வந்தார். அந்தப் பிள்ளை, பாடசாலை வளாகத்திலேயே மறைந்து கைப்பேசியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதைத் தெரிந்தபோது, நான் பெற்றோரை அழைத்து சந்தித்தேன். ஆனால், பெற்றோர்கள் “எங்கள் பிள்ளை கேட்டதை வாங்கித் தரவேண்டும்” என்ற தவறான எண்ணத்தில் இருந்தார்கள். அந்த பிள்ளைக்கு உண்மையில் பயன் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திக்கவில்லை.
இங்கே ஒரு கேள்வி எழுகிறது:
நாம் பெற்றோராக, ஆசிரியராக, சமூகமாக — நம் பிள்ளைகளின் வாழ்க்கையை நாம் காப்பாற்றுகிறோமா? அல்லது அழித்துவிட்டோமா?
முன்னோர்கள் காலத்தில், கல்வி என்பது பல தியாகங்களின் மூலம் கிடைத்த ஒன்று.
எங்கள் மூத்தவர்கள் சொன்னது போல, மாணவிகள் வண்டிகளில் மறைத்து கொண்டு செல்லப்பட்டு கல்வி கற்ற காலங்கள் இருந்தன. இன்று பாடசாலைகள் எங்களது வீட்டு வாசற்படியில் இருக்கின்றன. அனைத்தும் எளிதாகக் கிடைக்கும் காலம் வந்துவிட்டது.
ஆனால், அந்த அரிய வாய்ப்பை எங்கள் பிள்ளைகள் மதிக்காமல், நவீன வசதிகளில் மூழ்கி தங்களது எதிர்காலத்தை அழித்து வருகின்றனர்.
இது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. ஏனெனில், இன்று கூட சிறிய சிறிய வயதிலேயே பிள்ளைகள் திருமணமாகி, நீதிமன்றங்களில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
எனவே, எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த பெண்கள் தன்னார்வ நிறுவனம் கல்வி, ஒழுக்கம், சமூக பொறுப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு ஒளியாய் இருக்க வேண்டும். எங்கள் பிள்ளைகள் நல்ல வழியில் செலுத்தப்பட வேண்டும்.
பெண்கள் தங்கள் திறமையை அறிந்து, சமூக முன்னேற்றத்திற்காக வலிமையடைய வேண்டும். அப்படிச் செய்தால் தான், நாங்கள் எங்கள் முன்னோர்களின் கனவை நிறைவேற்றுகிறோம்.
எங்கள் சமூகத்தையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கிறோம். என்று தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற ஆசிரியை, மௌலவியா எம். எஸ். எஸ். நிஸ்ரினா தனது உரையில்:
இன்று நான் பேசுவது ஒரு நிகழ்வுக்காக மட்டும் அல்ல.
ஒரு தாயின் மனதில் பொங்கும் நன்றியும், மகிழ்ச்சியும், பெருமையும் கொண்ட உணர்வுகளாக இந்த வார்த்தைகள் வருகின்றன.
என் மகள் சிறு வயதிலிருந்தே ஒரு தனி குணம் கொண்டவள். எப்போதும் மற்றவர்களை நினைப்பவள். வீட்டில் கூட சும்மா அமர்ந்து கொண்டிருக்கும்போது — “அம்மா, இவ்வளவு கஷ்டத்தில் இருக்கும் குடும்பம் இருக்கிறதே, அவர்களுக்கு உதவலாமா?” என்று கேட்பவள்.
அவளுக்கு மனதில் எப்போதும் பிறரைப் பற்றிய கவலை, பிறருக்குச் செய்யவேண்டிய உதவி பற்றிய நினைவு. சில நேரங்களில் “அம்மா, அந்த விதவைக்கும் பிள்ளைகளுக்கும் நாம கொடுப்போமா?” என்று சொல்வாள். யாரேனும் கஷ்டப்பட்டு இருப்பதைப் பார்த்தாலே அவளுக்கு மனம் தாங்காது.
அதற்குப் பின்னால் நிற்கும் இன்னொரு பெரிய காரணம் — அவளது கணவர்.
அவளுக்கு உதவி செய்யும் நல்ல மனதை, அவளது கணவரும் பூரணமாக ஆதரிக்கிறார். ஒவ்வொரு நோன்பு மாதத்திலும் அவள் ஒரு பட்டியலைத் தயாரிப்பாள்:
“இந்த குடும்பத்துக்கு நாம கொடுக்கணும். அந்த குழந்தைக்கு நாம உதவணும்” என்று.
அந்த நேரங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து, எதையும் பொருட்படுத்தாமல், பிறருக்குப் பகிர்ந்து கொடுப்பதைப் பார்த்தால், என் தாய் மனம் நன்றியால் நிரம்பி வழியும்.
அல்லாஹ்வின் அருளால் எனக்கு பிறந்த ஒரே பெண் குழந்தை அவள். அவளுக்காக நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கைத்துணையைத் தேடினோம். அல்லாஹ் மிக அழகான பரிசாக, ஒரு நல்ல கணவரையும், நன்மை நிறைந்த குடும்பத்தையும் தந்தான். அது எனக்குப் பெரும் ஆறுதலும் மகிழ்ச்சியும்.
நான் எப்போதும் என் பிள்ளைகளுக்கு சொல்வது ஒன்று தான்:
“நம்மால் சேர்த்த செல்வம், நம்முடன் கல்லறைக்கு வராது. ஆனால் நம்மால் செய்த நன்மை மட்டும் தான் நம்மைத் தொடர்ந்து வரும்.”
அதை என் மகள் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி காட்டுகிறாள். அதுதான் என்னை மிகுந்த பெருமையடையச் செய்கிறது.
சில நேரங்களில் அவளுக்கு கோபம் வந்தாலும், அது உடனே கரையும். ஏனெனில் அவள் மனதில் “நம்மிடம் இருக்கும் அனைத்தும் பிறருக்காகவே” என்ற உண்மை அடிக்கடி நிலைத்திருக்கும்.
எனக்கு பெரும் சந்தோஷம் அளிப்பது என்னவென்றால், என் மகளின் வாழ்வில் அவள் மட்டும் அல்ல, அவளுடைய கணவரும், பிள்ளைகளும், குடும்பமும் எல்லோரும் இந்த மனப்பான்மையை ஏற்று வாழ்கிறார்கள்.
அதனால் தான் இன்று, இந்த சேவைக்கான முயற்சி, அவளுடைய உள்ளார்ந்த விருப்பத்தின் பலனாக, உங்கள் முன்னால் நிற்கிறது.
நான் என் வாழ்நாளில் பெற்ற மிகப் பெரிய மகிழ்ச்சி — என் பிள்ளைகள் பிறருக்குப் பயனுள்ள வாழ்க்கை வாழ்வதுதான். என்று தெரிவித்தார்.
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.றிப்கா அன்சார் தனது உரையில்;
இன்றைய உலகில், குறிப்பாக நமது குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறை, நல்ல கல்வியையும், நல்ல வாழ்வையும் பெறவேண்டும். பெண்கள் மாணவிகள் கல்வியில் அதிக ஆர்வத்தையும், முயற்சியையும் காட்டுகின்றனர். ஆனால் சில ஆண் மாணவர்கள் படிப்பில் தங்கள் பங்களிப்பை குறைத்து “நிறைய படிக்க தேவையில்லை” என்ற எண்ணத்தில் இருந்து கொள்கின்றனர். இது மிகவும் கவலைக்கிடமான நிலை. இதுவே தொடர்ந்தால், அவர்களின் எதிர்காலம் சிக்கல்களுக்கு வழிவிடும்.
எனவே, நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பெண்-ஆண் மாணவர்களும் இருவரும் சமமான வாய்ப்புகளைப் பெறவும், கல்வியில் முன்னேறவும் உதவி செய்ய வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினர் அனைவரும் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.
மேலும், நமது தொண்டு முயற்சியில் சதகா (Charity) என்ற பண்பும் மிக முக்கியம். சதகா என்பது பொருள் உதவியோடு மட்டுமல்ல; சேவையையும் கொண்டுள்ளது. உதாரணமாக:
• பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்தல்,
• மருத்துவ மற்றும் ஆலோசனை துறைகளில் சுயவாழ்வு சேவை செய்தல்,
• சமூக முன்னேற்ற திட்டங்களில் பங்களித்தல்.
இவ்வாறு, நாங்கள் சதகாவை வாழ்வில் உணர்த்தி, மிகவும் பயனுள்ள சேவைகளை நமது சமூகத்திற்கு வழங்கலாம். நமது சமூக மருத்துவர்கள் மற்றும் தலைவர்களுடன் முன்கூட்டியே ஆலோசித்து, பிரதேசங்களில் Charity Centres அமைத்து, கல்வி, சுகாதாரம், சமூக வழிகாட்டல் போன்ற சேவைகளை வழங்குவதே எங்கள் திட்டமாகும்.
அன்புடையீர், இன்று நாங்கள் தொடங்கும் இந்த முயற்சி, நம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்மை செய்யும் ஒரு பெரும் முயற்சி ஆகும். அதனால், எல்லோரும் ஒற்றுமையாக, முழுமையான முயற்சியுடன் பங்கேற்று, நமது குழந்தைகளுக்கும் எதிர்காலமும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். என்றும் கேட்டுக்கொண்டார்.