
மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கு முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் முறையான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உரிய நேரத்தில் வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனிடையே, மதுவரி அறவிடுவதில் காணப்படும் சிரமங்கள், அதில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அறவிடப்படவேண்டிய வரியை அறவிடுதல், கருப்புப் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் வரி வசூலிக்க முடியாத நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களைத் தடை செய்தல் போன்ற முறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
வரி அறவீட்டு சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள், வரி அறவீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் ஆட்சேர்ப்பு முறையிலுள்ள குறைபாடுகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையே நல்லஅபிப்பிராயம் இல்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
