மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி ஒருவர் நேற்று திங்கட்கிழமை குருநாகல், கட்டுப்பொத்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கட்டுப்பொத்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஒன்றை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது சாரதி மதுபோதையில் இருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பேருந்தில் 16 பாடசாலை மாணவர்களும், 2 பெற்றோர்களும் பயணித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பேருந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதி கட்டுப்பொத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கட்டுப்பொத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்