மதுபானம் கடத்திய பெண்கள்: கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பியோட்டம்
பதுளையில் மோட்டார்சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற பெண்கள் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையிடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த பெண்கள் சட்டவிரோதமான முறையில் மோட்டார்சைக்கிளில் மதுபானம் கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கந்தகெட்டிய பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் குறித்த மோட்டார்சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டபோது சந்தேகநபர்கள் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
