மண்மேட்டில் மோதிய லொறி
-நானுஓயா நிருபர்-
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு சனிக்கிழமை லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் எனினும் லொறியில் பயணித்தவர்கள் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்து மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிர் இழந்தனர்.
இதன் பின்னர் குறித்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தடை செய்யப்பட்டது இருந்தும் தற்போது தொடர்ந்து இருபுறங்களிலும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் கனரக வாகனங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் அத்துமீறி செல்லும் நிலை தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
மேலும் இவ்வீதியில் அதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றது. இதனால் சிறிய வாகன சாரதிகள் இவ்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீதி ஓரங்களில் தொழில் புரிவோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸார் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் செல்லாமல் தடுப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்