மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் உயிரிழப்பு

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பண்டாரவளை கல்வள பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளை பூனாகல வீதி கல்வளப் பகுதியில்  புதிய வீடு நிர்மாணிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில்  31 வயதான ஒரு பிள்ளையின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த  நபர் மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சக ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து  ஒரு மணித்தியாலயங்களுக்கு மேல் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளையி​லே அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு  மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட உள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.