மண்டைதீவு புதைகுழி விவகாரம் – அறிக்கையை கோரும் நீதிமன்றம்

யாழ், மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம் கோரியுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் கால அவகாசம் கோரியுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மண்டைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்வுக்கு தேவையான வசதிகள் இல்லை என ஊர்காவற்துறை பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து, வழக்கை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பாரப்படுத்த முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

1991 ஆம் ஆண்டில் தீவகப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்கள், மண்டைதீவிலுள்ள சில இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.