மணல், மரக்கட்டிலை உண்ணும் குழந்தை

இங்கிலாந்தைச் சேர்ந்த 21 மாதக் குழந்தையொன்றுக்கு, ஊட்டச்சத்து அற்ற, உண்ணத் தகாத பொருட்களைச் சாப்பிடத் தூண்டும் அரிய மருத்துவ நிலையான ‘பைகா’ (Pica) நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குழந்தையின் தாயான 31 வயதுடைய ஜெஸ் ஹாரி, தனது மகன் ஒரு கையளவு மணல், மரக்கட்டில், புத்தகம், கதவுச் சட்டங்கள் மற்றும் கடையில் வாங்கிய அட்டைப் பெட்டிகள் உட்பட எல்லாவற்றையும் கடித்து உண்பதால் தீவிரமான போராட்டத்தைச் சந்தித்து வருகிறார்.

குறிப்பாக, அவர் மரத் தொட்டிலில் இருந்து உலோகப் படுக்கைக்கு மாற்றப்பட்ட பிறகு, பழைய வண்ணப்பூச்சுப் பூசப்பட்டிருந்த கதவுச் சட்டத்தைக் கடித்ததால், அவரது இரத்தத்தில் ஈயம் கலக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பைகா நோய்க்குக் காரணமாக கருதப்படும் இரும்புச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட இந்த குழந்தைக்கு, தற்போது பாதுகாப்பான மாற்றுகளை வழங்கி தாய் ஜெஸ் சமாளித்து வருகிறார்.

எவ்வாறாயினும், பைகாவுக்கு நிரந்தரத் தீர்வு இல்லை என்றாலும், கவனத்தைத் திசை திருப்புவதன் மூலமும், உண்ணத் தகாத பொருளுக்குப் பதிலாக அதே அமைப்பு கொண்ட பாதுகாப்பான மாற்றுகளை வழங்குவதன் மூலமும் இதைச் சமாளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நோய் குறித்த விழிப்புணர்வும், இதற்கான ஆதரவும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டகுழந்தையின் தாய் வலியுறுத்தியுள்ளார்.