
மட்டு.வாகரையில் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஆர்ப்பாட்டம்
-வாழைச்சேனை நிருபர்-
வாகரைப் பிரதேசத்தின் களப்பு பகுதிகளில் அமைக்கத் திட்டமிடப்படும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று புதன் கிழமை பிரதேச மக்கள் வாகரை திருமலை வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி இது போன்றதொரு ஆர்ப்பாட்டத்தினை பிரதேச மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
அதனையடுத்து, பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட பகுதி நில அளவை செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் நில அளவை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குழப்ப நிலை அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே வேலைத் திட்டத்pனை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து மீண்டும் இவ் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வாகரை பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் கவனயிர்ப்பு போராட்டத்தில் தட்டுமுனை, புளியங்கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்சேனை, கதிரவெளி, கட்டுமுறிவு போன்ற இடங்களில் உள்ள மக்கள் கலந்து கொண்டு குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அடிக்காதே அடிக்காதே ஏழையின் வயிற்றில் அடிக்காதே, எங்கள் மக்களின் விவசாய நிலத்தை பறிக்காதே, கால் நடைக்கான மேச்சல் தரையினை அழிக்காதே, அழிக்காதே எமது வளத்தின அழிக்காதே, என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கை பற்றிய விடயங்களை அரசின் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கே.லிங்கராசா மற்றும் வாகரை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரணவன் ஆகியோரிடம் கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
இதன்போது, ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வொன்றினை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
உதவிப் பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு தெரிவிப்பதாக பதில் வழங்கினார்.
வழங்கப்பட்ட பதில்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்ற காரணத்தினால் அவ்விடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.
நீண்டகால பிரச்சினையான இவ்விடயத்திற்கு தீர்வு பெற்று தருவதில் மாவட்டத்தின் மக்களின் பிரதிநிதிகள் பாராமுகமாவுள்ளதாகவும் எந்தவொரு அரசியல் கட்சியையும் நம்பக் கூடாது என்றும், வாகரை மக்களை அனாதைகளாக்கியுள்ளதாகவும் அவர்களுக்கு சரியான பாடத்தினை கற்பிக்கவேண்டும் என்பதே எமது முதல் நோக்கமாக இருக்கவேண்டும் என்றும், அனைவரும் ஒன்றுபட்டு தமது உரிமையினை வென்றெடுக்க ஒன்றுபடவேண்டும், இது போன்ற நடவடிக்கைகள் இனிமேலும் இடம்பெறாது இருக்க அரச திணைக்களங்கள் செயற்படவேண்டும், என்று தெரிவித்து இவ்விடயத்தினை நீதிமன்ற நடவடிக்கைக்காக செயற்படப் போவதாக தெரிவித்து எல்லோரும் கலைந்து சென்றனர்.
கலவரம் இடம்பெறாது தடுக்க பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.



