மட்டு. மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில் சர்வதேச குத்துஸ் தினம் அனுஸ்டிப்பு
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில் சர்வதேச குத்துஸ் தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் ரமழான் வினா விடை போட்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்ஹலீம் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதேச சமூக நல ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சர்வதேச குத்துஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்ற சொற்பொழிவினை மௌலவி அல்ஹாபில் எம்.யூ.எம். சபீர் நிகழ்த்தினார்.
ரமழான் மாதத்தினுடைய இறுதி வெள்ளிக்கிழமையை சர்வதேச குத்துஸ் தினமாக ஈரான் இஸ்லாமிய புரட்சியினுடைய இஸ்தாபகர் இமாம் கொம்மினி ரம்மதுல்லா அலகி அவர்கள் அறிவித்திருந்தார்.
அன்று தொடக்கம் இன்றுவரை குத்துஸ்தினம், உலகம் முழுவதும் வாழக் கூடிய எல்லா மக்களாலும் பரவலாக அனுஸ்டிக்கப்பட்டு வருவதாக தமது சொற்மொழிவின் போது அவர் தெரிவித்தார்.
ரமழான் வினா விடை போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது.
பாலஸ்தீன மக்களின் நலன் மற்றும் விடுதலை வேண்டி விசேட துவா பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.