மட்டு. மீனவர் தாக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு-வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு நிருபர் -எஸ்.ஞானம்-

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற் பகுதியில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்து முழங்காலில் இரண்டு மணித்தியாலங்கள் வைத்திருந்ததாகவும் , இதன் போது தான் தாக்கப்பட்டதாகவும் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மீனவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் செட்டிபாளையம் கடலில் மீன்பிடிப்பதற்காக குறித்த மீனவர் அனுமதியற்ற மீன்பிடி வலைக்கு பாவிக்கும் ஈயம் துண்டுகளை வைத்துக் கொண்டிருந்தபோது அங்கு சிவில் உடையில் சென்ற கடற்படையினர் குறித்த மீனவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது மீனவர் நான் அனுமதியற்ற மீன்பிடி வலையான சுருக்குவலை பாவித்து மீன்பிடிக்கும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அங்கிருந்த வலையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

நான் ஒரு சர்க்கரை நோயாளி அதற்கான குளிசையை போடுவதற்கு விடுமாறு கோரியும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்காது அவரை முழங்காலில் வைத்துக் கொண்டனர்.

தனது கணவரை முழங்காலில் வைத்துள்ளதை கண்டு அதனை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை செய்து கொண்டதை கண்ட கடற்படையினர் குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியை பறித்து அவர் வீடியோ செய்த காட்சிளை அழித்ததுடன் அவரை தகாத வர்த்தைகளை பாவித்து அவரை கைது செய்யப் போவதாக மிரட்டி அவரை தாக்க முற்பட்டு அச்சுறுத்தல் விடுத்தாக மனைவியும் குறித்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த மீனவரை களுதாவளை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்திருந்த பின்னர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் காரியாலய அதிகரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர் மிகவும் மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , தன்னை முழங்காலில் வைத்திருந்த காட்சியை தனது பிள்ளைகள் உட்பட குறித்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்திருந்ததாகவும் , இதனால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் வெளயிட்டுள்ள காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கவில்லை சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த சுருக்குவலை பாவித்து மீன்பிடித்து வருகின்ற நிலையில் தன்னை மட்டும் கைது செய்தது முழங்காலில் இருக்க வைத்து அடித்து தாக்கியமைக்கு தனக்கு நீதி வேண்டும் என்றும் சம்மந்தப்பட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.