மட்டு. பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்கள் : சேகரித்த உலர் உணவுகள் ஒப்படைப்பு
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் செட்டிபாளையம் வடக்கு, தெற்கு இளைஞர் கழகம் இணைந்து சேகரித்த நிவாரணப் பொருட்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இளைஞர் விவகார அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் என்பன இணைந்து நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சேகரிக்கும் பணியை நாடளாவிய ரீதியாக முன்னெடுத்து வருகின்றது.
இச்செயற்பாட்டின் கீழ் இளைஞர் விவகார அமைச்சினுடாக மட்டக்களப்பில் நிவாரணப் பொருட்களை சேகரிப்பதற்கான மத்திய நிலையமாக மட்டக்களப்பு மாவட்டப் பணிமனை தெரிவு செய்யப்பட்ட நிலையில் இளைஞர் கழகங்கள் பிரதேச சம்மேளனங்கள் மாவட்ட சம்மேளனம் என்பன நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சம்மேளனத்தின் மேற்பார்வையில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாசின் வழிகாட்டலில் செட்டிபளையம் வடக்கு, தெற்கு இளைஞர் கழகங்களினால் சேகரிக்கப்பட்ட பெருமளவு பொருட்களுடன் மகிழூர் மேற்கு இளைஞர் கழகம், இமையம் இளைஞர் கழகம் ஆகியவாற்றில் ஒரு தொகுதி பொருட்கள் அடங்கலாக சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கடந்த 3ஆம் திகதி புதன்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரி சபியதாஸ் சகிதம் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் கு.இன்பலோஜன் தலைமையில் செட்டிபாளையம் வடக்கு தலைவர் செட்டிபாளையம் தெற்கு தலைவர், செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழக தலைவர் குழுவினர் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியான மாணிக்கப்போடி சசிக்குமார், திருமதி சதீஸ்வரி கிருபாகரன், அ.தயாசீலன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் (நிருவாகம்) இணையவழிமூலம் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








