
மட்டக்களப்பில் 17 வருடத்துக்கு முன் சகோதரனுக்கு கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு சென்றவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயம் அடைந்த நபர் தனது காணியை கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் விற்று அந்த பணத்தில் 6 1/2 இலட்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கிய நிலையில் அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திரும்பி வந்துள்ளார்.
நேற்று முன் தினம் செவ்வாய் கிழமை கொடுத்த கடனை கேட்டு சகோதரனின் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் அங்கு இல்லாத நிலையில், அவர் தனது சகோதரியின் வீட்டில் இருப்பதாக அறிந்த அவர் மாலை 6 மணியளில் சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாய் தர்க்கம் அதிகமாகி அவர் மீது அவரது சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவர் அவர்களது மகள் சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்கள், இரு ஆண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
