மட்டு நகரில் மகளிருக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பில் புகழ்பெற்ற வர்த்தக குழுமமாக மிளீர்ந்துகொண்டிருக்கும் வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் உதைப்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் மாவட்டத்திலுள்ள 16 பாடசாலைகளை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணிகளை ஒன்றிணைத்து மாபெரும் உதைப்பந்தாட்ட சமர் ஒன்றினை நேற்று முன்தினம் சனிக்கிழமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் நடத்தியிருந்தது.

உதைப்பந்தாட்ட சமரில் மாவட்டத்திலுள்ள 16 பாடசாலைகளை சேர்ந்த பலம்வாய்ந்த அணிகள் பலப்பரீட்சை நடார்த்தியிருந்தது. இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய அணியும் பன்சேனை பாரி வித்தியாலய அணியும் பலப்பரீட்சை நடார்த்தியிருந்தது.

போட்டியில் பன்சேனை பாரி வித்தியாலயம் சம்பியனாக தெரிவானது இரண்டாமிடத்தை முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய அணியும் மூன்றாமிடத்தை கட்டுமுறிவுக்குளம் ஜுடிஎம்எஸ் பாடசாலை அணியும் நான்காமிடத்தை அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது.

இத்தொடரில் முதலாமிடத்தை பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களுடன் கிண்ணமும் இரண்டாமிடத்தை பெற்ற அணிக்கு 75 000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணமும் கிண்மும் மூன்றாமிடத்தினை பெற்ற அணிக்கு 50 000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணமும் கிண்ணமும் நான்காமிடத்தை பெற்ற அணிக்கு 25 000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணமும் வழங்கப்பட்டது.

அத்தோடு தொடரில் சிறந்த கோள் காப்பாளருக்கான விருதை முனைக்காடு வீராங்கனைக்கும் அதிக கோள்களை போட்ட வீராங்கனைக்கான விருதை கட்டுமுறிவுக்குளம் வீராங்கனைக்கும் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பன்சேனை வீராங்கனைக்கும் வழங்கப்பட்டு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.

அதிதிகளாக மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா கல்வி வலயங்ஙளின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர்களும் வேல்முருகன் வர்த்தக குழுமத்தின் உறுப்பினர்களும் கோட்டமுனை விளையாட்டு கிராம உறுப்பினர்களும் மாவட்ட வர்த்தகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.